திருஅருட்பா ஓதும் போட்டி 2025

திருவருட்பா ஓதும் விழாவில் 2025
திருவருட்பா ஓதும் விழாவில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும், தங்கள் பிரிவுக்கு ஏற்ப மூன்று (3) அருட்பா பாடல்களை முழுமையாக மனனம் செய்திருக்க வேண்டும், பிரிவு 1,2, 3 க்கு விளக்கம் தேவை இல்லை. பிரிவு 4 மற்றும் பிரிவு 5 மாணவர்கள், பாடல்களை மனனம் செய்வதோடு மட்டும் நில்லாமல், அந்த மூன்று (3) பாடல்களின் விளக்கங்களையும் சரளமாக வழங்கத் தயாராக இருக்க வேண்டும்.
விளக்க உரையின் கால அளவு:
பிரிவு 4 மற்றும் 5 மாணவர்கள், ஒவ்வொரு பாடலுக்கும் அதிகபட்சம் 40 முதல் 60 வினாடி நேரத்தில் விளக்க உரையை துல்லியமாகவும் சுருக்கமாகவும் வழங்க வேண்டும். இங்கே தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை உங்கள் தேவைக்கேற்றவாறு சுருக்கிக் கொள்ளுங்கள்.
காணொளி பதிவேற்றம்:
ஒவ்வொரு மாணவரும் தங்கள் மூன்று பாடல்களை பதிவு செய்து கொடுக்கப்பட்ட லிங்கில் பதிவேற்ற வேண்டும். 07-03-2025 முதல் 28-03-2025 வரை விழா அமைப்பாளர்களின் இணையதளத்தில் உங்கள் காணொளியை சமர்ப்பிக்கவும்.
மாணவர்கள் ஸ்கேன் (scan) செய்வதற்கு முன் பதிவு செய்ய வேண்டும். கீழ்க்காணும் தகவல்கள் தேவை:
- குழு(Group):
- பெயர்(Name):
- அடையாள அட்டை எண் (IC No):
மேலே உள்ள குறியீட்டை ஸ்கேன்(Scan) செய்து உங்கள் பாடல்களைப் பதிவேற்றவும் அல்லது www.sample/arutpa லிங்கை அணுகவும்.
உங்கள் வீடியோவை பதிவேற்றுவதற்கான வழிமுறைக் காணொளியை பார்க்கவும்.
தேர்வு மற்றும் இறுதி சுற்று:
- 15-04-2025 முதல் 24-04-2025 இடை பட்ட காலத்தில், நடுவர் குழு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடுவார்கள்.
- இறுதி சுற்று:
இறுதி சுற்று 03-05-2025 அன்று ஆசியா பெசபிக் பல்கலைக்கழகதில் (Asia Pacific University) பிரிவு அடிப்படையில் நடத்தப்படும்.
விதிமுறைகள்:
இறுதி சுற்றுக்கான விதிமுறைகள் வெற்றியாளர்களின் பெயர்களை வெளியிடும் போது, வலைத்தளத்தில் அறிவிக்கப்படும்.
மின் சான்றிதழ் (e-Certificate):
பங்கு பெற்ற மற்றும் தேர்வு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் மின் சான்றிதழ் மின்னஞ்சல் அல்லது வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
இந்நிகழ்வு உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஓரறிய வாய்ப்பு ஆகையால் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பிரிவு 1 (6 வயது கீழ்)
- திருவிளங்க சிவயோக
- அகவல் வரி 1-10 வரை
- ஞான மருந்திம் மருந்து – சுகம்
பிரிவு 2 (வயது: 7 முதல் 9)
- அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே.
- அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
- பெற்ற தாய் தன் மகன் மறந்தாலும்
பிரிவு 3 (வயது: 10 முதல் 12)
- அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
- திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
- ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
பிரிவு 4 (வயது: 13 முதல் 15)
- தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
- அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
- போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
பிரிவு 5 (16 வயதுக்கு மேல்)
- வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
- நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து
- கரைவின்மா மாயைக் கரும்பெரும் திரையால்
பிரிவு 1 (6 வயது கீழ்)
பாடல் 1:
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே
கருத்துரை :
திரு என்னும் இறைவனின் அருள் விளங்க, சிவ யோகநிலையை கொடுக்கும் சித்தி எல்லாம் விளங்க, சிவஞானம் எனும் இறைவனின் மெய்ஞானம் விளங்க, இறை அனுபவம் விளங்க, திருச்சிற்றம்பலம் எனும் புருவ மத்தியில் இறைவனின் திருநடம் விளங்க, நம்முள் விளங்கும் அருள் ஒளியே, உடல் உயிர் உணர்ச்சி எல்லாம் விளங்க, உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் விளங்க அருள் உதவும் பெரும் தாயாக விளங்கும் இறைவா, வியப்பளிக்கும் அருட்சக்தி மகிழ்ந்து விளங்க, ஒளி சுடராகவும் ஒலியாகவும் புருவ மத்தியில் ஓங்கி வளர்ந்து விளங்கும் இறைவா!
பாடல் 2:
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி(1)
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி(2)
அருட் சிவ நெறிசார் அருட்பெரு நிலை வாழ் (3)
அருட் சிவ பதிஆம் அருட்பெருஞ்ஜோதி(4)
ஆகம முடிமேல் ஆரண முடிமேல் (5)
ஆக நின்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி(6)
இக நிலைப் பொருளாய்ப் பர நிலைப் பொருளாய் (7)
அக மறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி(8)
ஈனம் இன்றி இகபரத்து இரண்டின் மேற் பொருளாய் (9)
ஆனல் இன்று ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி (10)
கருத்துரை :
அருட்பெருஞ்ஜோதி அண்டத்திலும் பிண்டத்திலும் விளங்கும் அருட்பெருஞ்ஜோதியே! அருளாகிய சிவநெறி சார்ந்து அருளாகிய பெரிய நிலையில் வாழ்கின்ற அருளாகிய சிவமாக இருக்கின்ற அருட்பெருஞ்ஜோதியே! ஆகமங்களுக்கும் வேதங்களுக்கும் அப்பால் மிகச்சிறந்து தனித்து ஓங்கி விளங்கும் அருட்பெருஞ்ஜோதியே! இவ்வுலகப் பொருளாகவும் மேல் உலகப் பொருளாகவும் முழுமையாக பொருந்தி இயங்கும் அருட்பெருஞ்ஜோதியே! இவ்விரண்டு பொருட்களில் கலந்தாலும் தான் கெடாமல் குறைவின்றி மேற்பட்டு விளங்கும் அருட்பெருஞ்ஜோதி!
பாடல் 3
ஞான மருந்திம் மருந்து - சுகம்
நல்கிய சிற்சபா நாத மருந்து. (பல்லவி)
அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை
ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து
பொருட்பெரும் போக மருந்து - என்னைப்
புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து. (ஞானமரு)
எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள்
என்றும் விடாமல் இனிக்கு மருந்து
சொல்லால் அளவா மருந்து - சுயஞ்
ஜோதி அருட்பெருஞ் ஜோதி மருந்து. (ஞானமரு)
கருத்துரை :
ஞான மருந்தாகிய இறைவனின் அருள் இன்பம் கொடுக்ககூடியது; என்றும் சிற்றபையில் ஒலிக்க கூடியது. அருட்பெருஞ்ஜோதி எனும் மருந்து, என்னை ஐந்தொழிலும் செய்வதற்கு அளித்த மருந்து, சுகபோகத்தை கொடுக்கக் கூடிய மருந்து, என்னை புறமும் அகமும் கலந்த மருந்து. எல்லாம் செய்ய வல்லது இம்மருந்து, என் உள்ளே என்றும் தித்திக்கும் மருந்து. சொல்லி விளக்க முடியாத மருந்து, தானாக சுடர் விட்டு ஒளி தரும் அருட்பெருஞ்ஜோதிய எனும் மருந்து.
பாடல் 1
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்கு உட்படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரசிவமே
கருத்துரை :
அன்பு எனும் பிடிப்புக்குள் உட்படும் மலையே, அன்பு எனும் குடிசைக்குள் புகும் அரசே, அன்பு எனும் வலைக்குள் அகப்படும் இறைவனே, அன்பு எனும் கரத்தில் அமரும் அமுதமே, அன்பு எனும் கடலுக்குள் அடங்கிவிடும் கடலே, அன்பு என்னும் உயிரில் ஒளிவிடும் அறிவே, அன்பு எனும் அணுவுக்குள் அமைந்துள்ள பேரொளியே, அன்பே உருவமான பரம்பொருளே!
பாடல் 2
அம்பலவர் வந்தார் என்று சின்னம் பிடி
அற்புதம் செய்கின்றார் என்று சின்னம் பிடி
சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம் பிடி
பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி
புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம் பிடி
ஞானசித்திபுரம் என்று சின்னம்பிடி
நாடகம் செய் இடம் என்று சின்னம் பிடி
அப்பர் வருகின்றார் என்று சின்னம்பிடி
அற்புதம் செய்வதற்கென்று சின்னம்பிடி
கருத்துரை :
அம்பலத்தில் உள்ள இறைவன் வந்தார் என்று சின்னம் ஊதுங்கள், அற்புதங்களை செய்கின்றார் என்று சின்னம் ஊதுங்கள். சிற்சபையை பார்த்தோம் என்று சின்னம் ஊதுங்கள், சித்திகள் பல செய்கின்றோம் என்று சின்னம் ஊதுங்கள். பொற்சபையில் நுழைந்தோம் என்று சின்னம் ஊதுங்கள், மனம் மகிழ்கின்றோம் என்று சின்னம் ஊதுங்கள். இறைவன் எழுந்தருளிய இடம் ஞானசித்திபுரம் என்று சின்னம் ஊதுங்கள், இதுவே இறைவன் திருநடம் செய்யும் இடம் என்று சின்னம் ஊதுங்கள். நம் அப்பா இறைவன் வருகின்றார் என்று சின்னம் ஊதுங்கள், அற்புதங்கள் பல செய்வதற்கென்றே சின்னம் ஊதுங்கள்.
பாடல் 3
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
கருத்துரை :
பெற்ற தாயை பிள்ளை மறந்தாலும், பிள்ளையைப் பெற்ற தாய் மறந்தாலும், நேயமான உடலை உயிர் மறந்தாலும், உயிரைத் தாங்கிய தேகம் மறந்தாலும், கற்ற கல்வியை மனம் மறந்தாலும், கண்கள் இமைப்பது மறந்தாலும், நல்லோர் உள்ளே இருந்து விளங்கும் இறைவனை நான் மறக்க மாட்டேன்.
பாடல் 1
அப்பா நான் வேண்டுதல் கேட்டடு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருள் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேதும் நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலமையும் வேண்டுவேனே
கருத்துரை :
இறைவா நான் வேண்டுவதைக் கேட்டு அருள் புரிய வேண்டும். எல்லா உயிர்களுக்கும் நான் அன்பு செய்ய வேண்டும். நான் எங்கு சென்றாலும் உனது அருளின் புகழை பேசிட வேண்டும். இதுவரை யாரும் கூறாத மேல் நிலையில் விளங்கும் சுத்த சிவ மார்க்கம் இவ்வுலகம் முழுதும் பரவி வளர அருட்பெருஞ்ஜோதி வழிகாட்ட வேண்டும். நான் ஏதேனும் பிழை செய்திருந்தால் இறைவா நீ பொறுத்து அருள வேண்டும். என்றென்றும் உன்னை பிரியாத நிலைமை வேண்டுகிறேன்.
பாடல் 2
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித் திருவுருக் காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்புயிரோடு உளமும்
ஒளிமயமே ஆக்குற மெயுணர்ச்சி அருளாயோ
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட்கலந்தே
கங்குல்பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ
செருக் கருதாவர்க்கருளும் சித்தி புரத்தரசே
சித்த சிகாமணியேஎன் திருனட நாயகனே
கருத்துரை :
இறைவா, திரைகளை எல்லாம் விளக்கி கதவை திறப்பாயாக! அருள் கொடுக்கும் பெருஞ்சோதியின் திரு உருவத்தை காட்டுவாயாக! உருக்கி அமுது ஊற்று எடுத்தே உடம்பு உயிரோடு உள்ளமும் ஒளிமயமாக மாறும் உண்மை உணர்ச்சியை அருள்வாயாக! கரு இல்லாமல் தனி வடிவு எடுத்த இறைவா நீ என்னுள் கலந்து இரவு பகல் இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் வாழச்செய்வாயாக! ஆணவம் இல்லாதவர்களுக்கு அருளும் சித்தி புரத்து அரசே, சித்த சிகாமணியே என் திரு நட நாயகனே!
பாடல் 3
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
கருத்துரை :
எல்லா உயிர்களும் ஒன்று என்று நினைத்து இறைவனின் திருப்பாதங்களை வணங்கும் உத்தமரின் உறவு வேண்டும். மனதில் ஒன்றை வைத்து புறத்தில் வேறொன்று பேசுவோரின் நட்பு கலவாமல் இருக்க வேண்டும். இறைவனின் பெருமையை பேச வேண்டும். பொய் பேசாதிருக்க வேண்டும். பெரிய நெறியை பிடித்து நான் தொழ வேண்டும். மதம் எனும் பேய் என்னை விடியாமல் இருக்க வேண்டும். உலகியலின் ஆசை நான் மறக்க வேண்டும். இறைவா உன்னை நான் மறவாமல் இருக்க வேண்டும். சிறந்த அறிவு வேண்டும், உனது கருணை எனும் செல்வம் வேண்டும். நோயில்லாத வாழ்வில் நான் வாழ வேண்டும். சிறந்த சென்னை மாநகரில் உள்ள கந்தர் கோட்டம் எனும் தளத்தில் விளங்கும் கந்தவேளே, தன்முக தூய மணியே உண்முகச் சைவமணியே சண்முக தெய்வமணியே!
பாடல் 1
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!
கருத்துரை :
இப்பாடல் வள்ளல் பெருமானார் திருக்கரத்தால் எழுதப்பட்ட ஆறாம் திருவருட்பாவில் பரசிவ நிலை பதிகத்தில் பத்து பாடல்களில் மூன்றாவது கண்ணியில் இடம் பெற்றுள்ளது.
இப்பாடலின் வழி வள்ளல் பெருமானார் இறைவனின் குணத்தையும் தன்மையையும் இருப்பிடத்தையும் நமக்கு தெரிவிக்கின்றார். இறைவன் அன்னையைப் போல அன்பு பாராட்டி தந்தையைப் போல அறிவை வளர்த்து நம்மை அரவணைத்து பாதுகாக்கின்றார் என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார். இறைவனுக்கு ஈடு இணை இல்லை என்றும் இறைவனின் நிலை மிக உயர்ந்தது என்றும் இறைவனின் இயற்கை தன்மையை பெருமானார் விளக்குகின்றார்.
இறைவனின் இயற்கை தன்மையை உணர்ந்தோர் வாயார வாழ்த்தி இறைவனை வணங்கும் போது அவர்களின் மனதில் இறைவன் தானே வந்து குடி கொள்வான் என்று கூறுகிறார். இறைவன் தனது திருவடிகளை வள்ளல் பெருமானாரின் தலையில் வைத்து வாழ்த்தினான் என்று குறிப்பிடுகின்றார்.
இறைவன் பிஞ்சு காயை போல் அன்றி பழுத்த பழத்தைப் போன்று நன்கு தித்திக்கும் சுவை மிக்க உணர்வை கொடுக்க கூடியவன் என்றும் கருணை எனும் பெருஞ்செல்வத்தைக் கொண்ட இறைவன் தனக்கு எல்லாப் பொருளையும் காட்டுவித்தான் என்றும் விளக்குகின்றார். தன்னை இறை குழந்தையாகவே வளர்த்து வரும் தெய்வம் பெரிய தெய்வம் என்று புகழ்கிறார். அத்தெய்வம் சிற்சபை என்னும் புருவ மத்தியிலேயே நடமிட்டுக் கொண்டு நம்முள்ளே குடிகொண்டுள்ளான் என்று இறைவனின் இருப்பிடத்தையும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றார்.
இந்த பாடல் வள்ளலாரின் இறை துதிப் பாடல்களில் ஒன்றாகும். இதில் இறைவனின் அருட்பெருஞ்சோதி தன்மையை மெய்யுணர்வோடு தியானிக்கிறார். இறைவனை தாயும் தந்தையும் எனக் குறிப்பிட்டு, இறைஅருளின் பரிபூரணத்தை வண்ணமிகு சொல்லாக்கத்தால் புகழ்ந்து விளக்குகிறார்.
பாடல் 2
அருள்விளக்கே அருட்சுடரே அருட்சோதிச் சிவமே
அருளமுதே அருள்நிறைவே அருள்வடிவப் பொருளே
இருள்கடிந்தென் உளமுழுதும் இடங்கொண்ட பதியே
என்அறிவே என்உயிரே எனக்கினிய உறவே
மருள்கடிந்த மாமணியே மாற்றறியாப் பொன்னே
மன்றில்நடம் புரிகின்ற மணவாளா எனக்கே
தெருள்அளித்த திருவாளா ஞானஉரு அருள்விளக்கே வாளா
தெய்வநடத் தரசேநான் செய்மொழிஏற் றருளே
கருத்துரை:
இப்பாடல் திருவருட்பா ஆறாம் திருமுறையில் நூறு பாடல்கள் கொண்ட அருள் விளக்க மாலை சதகத்தில் முதல் பாடலாக வள்ளல் பெருமானாரின் திருக்கரத்தால் இயற்றப்பட்டுள்ளது.
இறைவனின் அருளை விளக்கும் பாமாலையாக இப்பாடல் அமைந்துள்ளது. வள்ளல் பெருமானார் இறைவனை அருளின் விளக்காகவும் அருளின் ஒளிக்கதிராகவும் அருளின் ஒளியாகவும் அருளின் அமுதாகவும் அருளின் முழுமையாகவும் இறைவனின் வடிவமே அருளாகவும் போற்றுகின்றார்.
இருளினும் அறியாமை நிறைந்த தன் மனதிலும் இறைவன் குடி கொண்டுள்ளான் என்றும் தனக்கு அறிவாகவும் நீராகவும் இனிய உறவாகவும் கூறுகின்றார்.
குழப்பமும் பயமும் தீர்த்த மாமணியான இறைவனை உயர்தரமிக்க பொன்னே என்றும் போற்றுகின்றார். சிற்சபையில் நடனமிடும் தலைவனாகிய இறைவன் தனக்கு அறிவின் தெளிவைக் கொடுத்த ஞான உருவை கொண்டவன் எனவும் தெய்வங்களை எல்லாம் வழி நடத்தும் அரசன் எனவும் போற்றி தான் பாடிய பாடல்களை ஏற்று அருள்புரிய வேண்டுகிறார்.
பாடல் 3
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (790)
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்சோதி
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் (791)
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (792)
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்சோதி
சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே (793)
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (794)
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்சோதி
உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம் (795)
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்ச் சுகநிலை பெறுக (796)
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் (797)
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி (798)
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
கருத்துரை:
1596 வரிகள் அல்லது 798 கன்னிகள் கொண்ட அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளல் பெருமானார் தன் திருக்கரத்தால் சாத்தியுள்ளார். அருட்பெருஞ்ஜோதி அகவலில் இறுதி 9 கன்னிகளுக்கு நாம் கருத்துரை காணலாம்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் எல்லையற்ற அருள் போற்றப்படுவதாகவும், அந்த எல்லையற்ற ஆற்றல் என்றும் குறையாமல் காலத்தை வென்று நிலைத்து நிற்பதாக நம் பெருமானார் பாடியுள்ளார்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற தொழில்களை செய்யும் மூவரும், முப்பது முக்கோடி தேவர்களும், உயிரை தங்களுக்குள்ளே அடைத்துக் கொண்ட முத்தர்களும், உயிருடன் காய சித்தி பெற்ற சித்தர்களும் பெற முடியாத இயற்கையின் இயக்கத்தை, இயற்கையின் உண்மையான அருளை தனக்கு இறைவன் அளித்தான் என்று நமக்குத் தெரிவிக்கிறார்.
தனது சித்திகள் அனைத்தையும் இறைவன் தனக்கு தெளிவு படுத்தி முடிவாக என்றும் அழியாத உண்மையான நிலையையும் தனது தனிப் பெரும் கருணையால் தந்தருளினார் என்று வள்ளலார் பறைசாற்றுகிறார்.
இப்புவியில் உள்ள உயிர்கள் அனைத்தும் அனுபவிக்கும் துன்பங்களை விளக்கி அவற்றை நீ ஏற்றுக் கொண்டு உவகை கொள் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டதை தெரிவிக்கிறார்.
இவ்வாறு எல்லா உயிர்களும் துன்பம் விலகி இன்புறுவதற்கு வழிவகுக்கும் போது சுத்த சன்மார்க்கத்தின் உயர்ந்த அருள் நிலையான பேரின்ப நிலையைப் பெற்றுக்கொள்ளலாம், இறைவனாகவே ஆகலாம், அழியாமல் என்றென்றும் உயர்ந்து, வளர்ந்து, எல்லா இடத்திலும் தன் ஆற்றலை பரப்பலாம் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கூறியதாக வள்ளல் பெருமான் குறிப்பிடுகிறார்.
பாடல் 1
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி - அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி
துள்ளலை விட்டு தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி
சாதி சமயக் சழக்கை விட்டேன், அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன், மன்றாடும்
அய்யனைக் கண்டேனடி, அக்கச்சி
அய்யனைக் கண்டேனடி
கருத்துரை:
வள்ளல் பெருமானார் தன் திருக்கரத்தால் சாற்றிய திருவருட்பா ஆறாம் திருமுறையின் பாடல் இது. வள்ளலார் கண்ட அருட்காட்சியை விளக்கும் இப்பாடல் நான்கு கன்னிகளை கொண்டது.
வானம் எனும் சிதாகசத்தில் தான் ஞான காட்சியை கண்டதாக மயிலின் ஆட்டத்திற்கு உவமைப்படுத்திக் கூறுகிறார் வள்ளல் பெருமானார். மயிலை ஒளிக்கு உவமையாகவும் குயிலை ஒலிக்கு உவமையாகவும் கூறுகிறார்.
ஞான காட்சியெனும் அருட்காட்சியை கண்ட பிறகு பெருமானார் தன் மனதிலும் உலகியலிலும் ஏற்படும் ஆரவாரங்களிலும் இருந்து விடுபட்டு அமைதியான நிலையில் தன் புருவமத்தி எனும் மன்றில் நடமிடும் கருணைமிகு கொடையாளியான இறைவனைக் கண்டதாக கூறுகிறார்.
இன பாகுபாடு ஏற்றத்தாழ்வுகளாலும் மத பேதங்களாலும் ஏற்படும் பயனற்ற செயல்களை கைவிட்டதனால் தான் அருட்பெருஞ்ஜோதி உண்மை இறைவனைக் கண்டதாக வள்ளல் பெருமானார் கூறுகிறார். பொய் நெறிகளை தன் மனதில் இருந்து முழுமையாக நீக்கிய பின் மெய்ப்பதையில் தன் பயணத்தை தொடர்ந்ததால் தன் புருவ மத்தியான மன்றத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உண்மை இறைவனைக் கண்டதாக தன் தமக்கை இடம் கூறுவது போல் இப்பாடலை புனைந்துள்ளார் நம் பெருமானார்.
பாடல் 2
நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே
கருத்துரை:
ஞானசரியை எனும் பதிகத்தில் ஆறாம் திருவருட்பாவில் 28 கன்னிகளில் வள்ளல் பெருமானார் பாடி உள்ளார. இப்பாடல் முதல் கன்னியில் அமையப்பெற்றுள்ளது.
மனிதர்கள் தங்கள் சிறுமையை நினைத்தும் இறைவனின் பெருமையை நினைத்தும், தம் மனதில் இவ்வேற்றுமைகளை ஆழமாக உணர்ந்து உருகி அன்பு உணர்வு ஊற்றெடுக்க வேண்டும் என்கிறார் பெருமானார்.
மேலும் இவ்உணர்வை வெளிப்படுத்தும் வண்ணம் நம் கண்களில் கண்ணீர் வழிந்து அதனால் உடம்பு நனைகிறது என்கிறார் வள்ளலார். பெருமானார் இறைவனை அருளாக்கிய அமுதமே நல்ல அருள் செல்வமே ஞான நடம் புரியும் அரசனே என்னுடைய உரிமை நாயகனே என்று போற்றிப் புகழ்ந்து நாம் அனைவரும் வழிபடலாம் வாருங்கள் என உலக மக்களை அழைக்கின்றார்.
இவ்வாறு வழிபட்டால் மரணம் இல்லா பெருவாழ்வாகிய பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் என்று உறுதியாக கூறுகின்றார். நான் கூறும் இவ்வார்த்தைகள் அனைத்தும் கற்பனை அல்ல, பொய் அல்ல, உண்மையான சத்திய வார்த்தைகள் ஏனெனில் ஆன்மா ஆகாசமாக உள்ள பொன்னம்பலம் எனும் பொற்சபையிலும் நம் புருவ மத்தியின் நடுவாகிய சிற்றபையிலும் நுழையும் தகுந்த காலம் இதுவே என்று வள்ளல் பெருமானார் நமக்கு இயற்கை விளக்கமாகிய இறைவனை நம்முள் அக வழிபாடு செய்வதன் வழி பெறக்கூடிய பெரும்பேற்றை விளக்குகிறார்.
எளிய விளக்கம்:
வள்ளலார் திருக்கரம் சாத்திய இப்பாடலின் வழி நம்முள் இருக்கும் இறைவனை அன்பு உணர்வோடு கண்களில் கண்ணீர் மல்க வழிபடும்போது பெறக்கூடிய பெரிய வாழ்வையும் அக வழிபாட்டின் வழி நம் புருவ மத்தியில் நடமிடும் இறைவனை காணக்கூடிய காலத்தையும் சத்தியம் செய்து உலக மக்கள் பயன் பெற பறைசாற்றுகிறார்.
பாடல் 3:
கரைவின்மா மாயைக் கரும்பெரும் திரையால் (813)
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால் (815)
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை (817)
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை (819)
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை (821)
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை (823)
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
கலப்புத் திரையால் கருது அனுபவங்களை (825)
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால் (827)
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் (829)
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே (831)
அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
கருத்துரை:
இப்பாடல் வரிகள் வள்ளல் பெருமான் திருக்கரம் சாற்றிய அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளில் திரைகளை பற்றிய கூறிய விளக்கங்கள் ஆகும்.
அசுத்த மாயை எனும் பெரிய கருப்புத் திரை உயிர்களின் கண்ணுக்கும் உணர்வுக்கும் இறைவனின் அருட்காட்சி புலப்படாதவாறு அருட்பெருஞ்ஜோதியை மறைக்கிறது.
வானைப்போல் பெரிதாக உள்ள நீலத்திரை உயிர்களை நேரடியாக காண இறைவனை ஒட்டாமல் அருட்பேரொளி தடுக்கிறது.
பச்சை திரை எனும் சுத்த மாயைத்திரையால் பிரகாச அருட்பேரொளி மறைக்கிறது.
சித்துக்கள் நடைபெறும் சிதம்பர வெளியே அருட்பேரொளி சிவப்பு திரையால் மறைக்கிறது.
பொன் என்ற மஞ்சள் நிறம் உள்ள திரோதய மாயை திரையால் அருட்பெயரொளியின் இறைவன் உள்ள பொன்னம்பல வெளியே மறைக்கிறது.
வெண்மையான ஆதி சக்தி எனும் திரையால் உண்மை கடவுள் வெளியை அருட்பேரோளி தடுக்கிறது.
பல்வேறு நிறங்களின் கலப்பு திரையால் உயிர் அடையும் அனுபவங்களின் உண்மையை தெரிய வெட்டாமல் தடுப்பது அருட்பேரொளியே!
புலன்களும் புலன்களின் செயல்பாடுகளும் உடலுக்கும் உலகுக்கும் இடையே ஏற்படும் தொடர்புகளை பல்வேறு திரைகளால் மறைத்து அப்புலன்களின் எல்லையை காட்டுவது அருட்பேரொளியே!
உடலின் தத்துவ நிலைகளை ஒவ்வொரு தனித்திரையாலும் மறைத்து செயல்படுவது அருட்பேரொளியே!
உயிர்களின் வினை நீங்கி பக்குவம் வந்த போது அருள் சக்தியால் எல்லா திரை மறைப்புகளும் நீங்கி ஆங்கே இறைவனின் ஆட்சியை உயிர்களுக்கு தெளிவாக காட்டுவதும் அருளாகிய பேரொளியே!
எளிய விளக்கம்:
பக்குவம் இல்லாத ஆன்மாக்களுக்கு பல்வகை திரைகளாகிய மறைப்பை கொடுத்து பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் பக்குவம் பெரும்பொழுது திரைகளாகிய மறைப்புகள் அனைத்தையும் நீக்கி அருள் அறிவு விளக்கி இறைவனின் அருள் ஆட்சியை காட்டு விப்பது அருட்பெரும் ஜோதியே!
திருவருட்பா பாடல் விளக்கத்திற்கான மேற்கோள் நூல்கள்
1. திருவருட்பா மூலமும் உரையும், 10ம் தொகுதி ( 2010). உரையாசிரியர் ஔவை துரைசாமிப்பிள்ளை
2. அருட்பெருஞ்ஜோதி அகவல் எளிய உரை (2013). உரையாசிரியர் திரு. இரா. குப்புசாமி
3. திரு அருட்பா அகராதி ( 2017). ஆசிரியர் புலவர் சீனி சடையப்பன் & டாக்டர் பா. சரவணன்
4. திருக்குறள் மிக மிக எளிய உரை 2020). பேராசிரியர் டாக்டர் மு. பெரி. மு. இராமசாமி
4. படிப்படியாக சன்மார்க்கம் அறிவோம் விரிவுரைகள் ( இணைய வழி, 2020-2025), பெண்ணாடம் அறநிலையம், தமிழ்நாடு, இந்தியா. விரிவுரையாளர் திரு. முத்து ஜோதி